2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டி; உறுதியான முடிவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவேன் - ஜோ பைடன்
2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஜோ பைடன் தலைமையிலான அரசு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனிடையே அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும், அதே சமயம் இதுகுறித்த உறுதியான முடிவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.