அமெரிக்காவில் கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலி - சாதனை முயற்சியில் நேரிட்ட சோகம்

அமெரிக்காவில் சாதனை முயற்சியில் ஈடுபட்ட கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலியானார்.

Update: 2019-08-30 22:31 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த ஜெசிகா காம்ஸ், உலகிலேயே அதிவேகமாக கார் ஓட்டும் பெண் என்கிற புகழுக்கு சொந்தக் காரர் ஆவார். விமானத்தின் என்ஜினை பொருத்தி கார் ஓட்டுவதில் வல்லவரான இவர், 2013-ம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்தார்.

அதன் பின்னர் மணிக்கு 777 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி தனது சாதனையை தானே முறியடித்தார். மேலும் இந்த சாதனைகள் மூலம் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். எனினும் அதிவேகத்தில் காரை ஓட்டும் சாதனை முயற்சிகளுக்கு அவர் ஓய்வு கொடுத்துவிடவில்லை.

1976-ம் ஆண்டு அமெரிக்க கார் பந்தய வீராங்கனையான கிட்டி ஓ நெய்ல், மணிக்கு 824 கி.மீ. வேகத்தில் 3 சக்கர வாகனத்தை ஓட்டி படைத்த சாதனையையும், 4 சக்கர வாகனத்தில் தான் படைத்த முந்தைய சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஜெசிகா காம்ஸ் ஈடுபட்டிருந்தார்.

இதற்காக அண்மையில் ஓரேகான் மாகாணத்தில், விமானத்தின் என்ஜின் பொருத்தப்பட்ட தனது பிரத்யேக காரில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் ஜெசிகா காம்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்