உலகின் மிகப்பெரிய குடும்பம் கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்த முதியவர்
முதியவர் ஒருவர் உலகின் மிகப்பெரிய குடும்பம் எனக் கூறி கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார். #GuinnessWorldRecord;
உக்ரைன் நாட்டில் குடியிருந்து வருபவர் 87 வயதான பவெல் செமினியூக். தமது இளமை காலம் தொட்டே மிகப்பெரிய குடும்பம் குறித்து கனவு கண்டு வந்த இவருக்கு திருமணம் முடிந்து 13 பிள்ளைகளை பெற்றெடுத்தார் இவரது மனைவி. பல திருமணங்கள் மற்றும் பிறப்புகள் கண்ட இவரது குடும்பத்தில் தற்போது 346 உறுப்பினர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி மிகவும் வயது குறைவான நபருக்கு வயது 2 வாரங்கள் தான்.
டிசா ஒபலஸ்ட் மாகாணத்தில் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருக்கும் செமினியூக் தமக்கு பிறந்த 13 பிள்ளைகளால் தாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என எப்போதும் கூறி வந்துள்ளார். ஆனால் தற்போது அவருக்கு 127 பேரப்பிள்ளைகள் உள்ளனர். அது மட்டுமின்றி 203 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். மேலும் அவரது கொள்ளுப் பேரப்பிள்ளைகளுக்கும் தற்போது 3 பிள்ளைகள் உள்ளனர். முன்னாள் கட்டுமானத் தொழிலாளியான செமினியூக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் தமது பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் பெயர்களை நினைவில் வைத்திருப்பது மட்டுமே கடினம் என கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெறும்போது எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கான குடியிருப்பை கட்டுவதில் மும்முரமாகிவிடுவார்கள் என கூறும் செமினியூக், தமது பேரப்பிள்ளைகளும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுவருவது தமக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய நபர் ஒருவர் 192 குடும்ப உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.