நேபாளத்தில் ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படுகையில் சறுக்கியது

நேபாளத்தில் ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படுகையில் சறுக்கியதில் 139 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update:2018-04-21 04:15 IST

காட்மாண்டு,

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியாவின் மெலிண்டா ஏர் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 4 சிப்பந்திகள் உள்பட மொத்தம் 139 பேர் இருந்தனர்.

அந்த விமானம் ஓடு தளத்தில் இருந்து புறப்படுகையில் சறுக்கி ஓடி, 50 மீட்டர் தொலைவில் புல்தரையில் போய் நின்றது. ஆனால் விமானத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஓடுதளத்துக்கும் பாதிப்பு இல்லை. அதில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இருப்பினும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஓடுதளம் உடனடியாக மூடப்பட்டது. சர்வதேச விமான புறப்பாடுகளும் உடனே நிறுத்தப்பட்டது. குறைந்தது 12 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். நடந்தது என்ன என்பது உடனடியாக தெரியாததால் அவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் ராஜ்குமார் சேத்ரி கூறும்போது, ‘‘விமானி அறையின் திரையில் ஒரு தவறு நேர்ந்து இருப்பதை விமானி கடைசி நிமிடத்தில் பார்த்து உள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விமானத்தின் புறப்பாட்டை பாதியில் நிறுத்தியதுதான் விமானம், ஓடுதளத்தில் இருந்து சறுக்கி சிறிது நேரம் சென்று சேற்றில் சிக்கியதற்கு காரணம் ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.

12 மணி நேரத்துக்கு பின்னர் நேற்று திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கியது.

மேலும் செய்திகள்