ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு; 2 பேர் காயம்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2017-06-25 15:56 GMT

டோக்கியோ,

நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கின.  மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.  மேஜைகள் சரிந்தன.  பெரிய பாறைகளும் உருண்டு சாலைகளில் விழுந்தன.

இந்நிலநடுக்கத்தில் வீட்டில் இருந்த மேற்கூரை விழுந்ததில் 83 வயது நிறைந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.  இதேபோன்று வீட்டில் இருந்த மேஜை டிராயர்கள் சரிந்து விழுந்ததில் 60 வயது நிறைந்த மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.

4 புவித்தட்டுகள் சந்திக்கிற இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.  நாகானோ மாகாணத்தில், இனா நகரத்தில் இருந்து 30 கி.மீ. மேற்கில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்த நில நடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்தவெளி மைதானங்களிலும், வீதிகளிலும் தஞ்சம் அடைந்தனர்.  மத்திய ஜப்பானில் ஷின்கான்சென் புல்லட் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அணு மின் நிலையங்களில் பிரச்சினை எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மேலும் செய்திகள்