சட்டசபை தேர்தலில் வெற்றி: 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மாவட்டத்தை மீண்டும் தனது கோட்டையாக்கிய தி.மு.க.!
25 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தனது கோட்டையாக மாற்றி உள்ளது. ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ் (தி.மு.க) திருச்சி மேற்கு தொகுதியில் கே. என். நேரு (தி.மு.க), ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டி (தி.மு.க), திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (தி.மு.க), லால்குடி தொகுதியில் சவுந்தரபாண்டியன் (தி.மு.க), மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது (தி.மு.க. கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி), முசிறி தொகுதியில் காடுவெட்டி தியாகராஜன் (தி.மு.க), மண்ணச்சநல்லூர் தொகுதியில் கதிரவன் (தி.மு.க) துறையூர் (தனி) தொகுதியில் ஸ்டாலின் குமார் (தி.மு.க) வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்பட அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு இதேபோல் தி.மு.க. கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றியது. அப்போது திருச்சி-1 (தற்போதைய திருச்சி கிழக்கு) தொகுதியில் பரணிகுமார், திருச்சி-2 (தற்போதைய திருச்சி மேற்கு), அன்பில் பொய்யாமொழி, ஸ்ரீரங்கத்தில் தி.ப.மாயவன், லால்குடியில் கே.என்.நேரு, திருவெறும்பூர் தொகுதியில் துரை, மருங்காபுரியில் (தற்போதைய மணப்பாறை) புலவர் செங்குட்டுவன், தொட்டியம் தொகுதியில் கண்ணையன், முசிறி தொகுதியில் ஜோதி கண்ணன், உப்பிலியபுரம் (தற்போதைய துறையூர்) தொகுதியில் கருப்பசாமியும் வெற்றி பெற்றிருந்தனர். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க. திருச்சி மாவட்டத்தில் மீண்டும் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது.
அ.தி.மு.க.வால் 1996-ல் எப்படி ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லையோ அதேபோன்ற வரலாறு மீண்டும் திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.