போடி சட்டப்பேரவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி

போடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

Update: 2021-05-02 22:53 GMT
தேனி,

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3-வது முறையாக அவர் போடி தொகுதியில் களம் இறங்கினார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்பட மொத்தம் 24 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

போடி தொகுதியில் பதிவான வாக்குகள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பின்னடைவை சந்தித்தார். அந்த சுற்றில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். அதன்பிறகு 3-வது சுற்றில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முன்னிலை வகித்தார்.

இரவு 10 மணி நிலவரப்படி 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் 67 ஆயிரத்து 685 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 59 ஆயிரத்து 761 வாக்குகள் பெற்றார். அவரை விடவும் ஓ.பன்னீர்செல்வம் 7,924 வாக்குகள் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில் போடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்