தமிழக சட்டசபை தேர்தல் : காலை 11 மணி நேர நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவு
தமிழக சட்டசபை தேர்தல் : காலை 11மணி நேர நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சென்னை
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நேர நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் வாக்குச்சாவடி எண் 196-ல் வாக்குப்பதிவு நிறுத்தம்
மயிலாடுதுறையில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 131-வது வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தை தொலைவில் சென்று நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்தை அகற்றாவிட்டால் காற்றைப் பிடுங்கி விடுவேன் என போலீசார் எச்சரித்தனர். 'உன்னால் முடிந்தால் செய்துபார்' என திமுக நகர செயலாளர் சவால் விடுத்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பிரச்சினை ஏற்பட இருந்த நிலையில் அங்கு நின்றிருந்த அதிமுக பிரமுகர்கள் திமுக நகர செயலாளருக்கு சாதகமாக பேசி நிலைமையை சரி செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடைவீதி சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 178-ல் வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 7-ல் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் புகைப்படம் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக முகவர்கள் இதுகுறித்து வாக்குச்சாவடியின் மண்டல துணை அலுவலர் பிரவீன்ராஜுடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
மேலும் இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஏன் தெரிவிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பி வாக்கு மையத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இரண்டு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.