சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் வேளச்சேரி தொகுதி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தி.மு.க. வேட்பாளர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), காரப்பாக்கம் கணபதி (மதுரவாயல்), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), டாக்டர் எழிலன் (ஆயிரம்விளக்கு) மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா (வேளச்சேரி) ஆகியோருக்கு ஆதரவாக திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் வடக்கு மாட விதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து அவருக்கு ‘கை' சின்னத்தில் வாக்குகள் கேட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எந்த பொறுப்புக்கு வந்தாலும்...
1973-ம் ஆண்டு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் அண்ணா சிலை அமைக்கப்பட்டது. அப்போது எனக்கு 20 வயது. இப்போது 68 வயது ஆகிறது. நான் இளைஞர் தி.மு.க. அறக்கட்டளை தலைவராக இருந்தபோது, கருணாநிதியால் அண்ணா சிலை திறக்கப்பட்ட இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.
என்னை நாட்டுக்கு அடையாளப்படுத்திய ஊரான திருவான்மியூருக்கு வந்திருக்கிறேன். இந்த வேளச்சேரி தொகுதிக்கும், எனக்கும் அதீத தொடர்பு இருக்கிறது. நான் 2 முறை சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது வேளச்சேரியில்தான் வசித்தேன்.நான் மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கிறேன். நாளைக்கு எந்த பொறுப்புக்கு வந்தாலும் என்னை உருவாக்கிய திருவான்மியூர், வேளச்சேரியை என்னால் மறக்க முடியாது.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்
நான் மேயராக இருந்தபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 10 மேம்பாலங்களை கட்டித்தந்தேன். அதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையில் ரூ.30 கோடியை நான் மிச்சப்படுத்திக் கொடுத்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.
1996-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான்தான். 2011-ம் ஆண்டு நான் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிட்டபோது என்னைத் தோற்கடிக்க அராஜகம் செய்தார்கள். ஆனாலும் 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்று மீண்டும் மேயர் ஆனேன். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் பணியாற்றி இருக்கிறேன். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. முதல்-அமைச்சர் வேட்பாளராக நானும் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை நீங்கள் வெற்றிபெறச் செய்தால்தான் நான் முதல்-அமைச்சராக முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உதயநிதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
மு.க.ஸ்டாலின் இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தனது மகனான தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். மாலையில் கொளத்தூர் தொகுதியில் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டுகிறார்.