‘‘ஏழை மாணவர்களின் அரசுப்பணி கனவை நிஜமாக்கியவர் சைதை துரைசாமி’’ தேர்தல் பிரசாரத்தின்போது கராத்தே தியாகராஜன் பேச்சு
“ஏழை மாணவர்களின் அரசுப்பணி கனவை நிஜமாக்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றியவர், சைதை துரைசாமி”, என தேர்தல் பிரசாரத்தின்போது கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி களம் இறங்கியிருக்கிறார்.
இந்தநிலையில் அவருக்கு ஆதரவாக தொகுதிக்குட்பட்ட கோட்டூர் மார்க்கெட் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் ‘இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் கராத்தே தியாகராஜன் பேசியதாவது:-
சைதை துரைசாமி வெற்றி பெற்றால்...
எம்.ஜி.ஆரின் அன்பையும், ஜெயலலிதாவின் ஆசியையும் பெற்று உண்மையான மக்கள் தொண்டனாக வாழ்ந்து வரும் சைதை துரைசாமி, சைதாப்பேட்டை தொகுதிக்கு வேட்பாளராக கிடைத்தது நமக்கு பெருமை. அந்தக் காலத்திலேயே தனது வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம், டைப்ரைட்டிங் மெஷின் உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு, ஏழை மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்கு பெரும் உதவி புரிந்து வந்தார். மனிதநேய அறக்கட்டளை மூலம் எத்தனையோ ஏழை மாணவர்களை மத்திய-மாநில அரசுப் பணிகளுக்கு அனுப்பி வைத்து, அவர்களது கனவை நிஜமாக்கியவர்.
தன்னலம் கருதாது, பொதுநலனுக்காக உழைக்கும் சைதை துரைசாமி வெற்றி பெற்றால் இந்த தொகுதி இன்னும் வளம்பெறும். மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியான தொகுதியாக நிச்சயம் விளங்கும்.
அம்மா உணவகம் திட்டம்
சைதாப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கும் மா.சுப்பிரமணியன், தனது ஆரம்ப காலத்தில் ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டு இருந்தார். இப்போது அவரது பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன.
ஆனால் சைதை துரைசாமி உண்மையான மக்கள் தொண்டன். சென்னை மேயராக பணியாற்றிய காலத்தில் எத்தனையோ நலத் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். உலகம் போற்றும் அம்மா உணவகத் திட்டத்தை ஜெயலலிதா மக்களுக்கு வழங்கினார். இதற்கு மூலக் காரணமே சைதை துரைசாமி தான். எனவே நல்ல மனிதரான அவருக்கு 'இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கதிர்முருகன், பா.ம.க. மாவட்ட செயலாளர் வே.வடிவேல் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. ஆட்சி
அதனைத் தொடர்ந்து கராத்தே தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கேவலமாக விமர்சித்து பெண்களை இழிவுபடுத்தி ஆ.ராசா பேசினார். உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சனங்களை முன்னெடுத்து வருகிறார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரத்தான் போகிறது. மக்களின் பேராதரவுடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். தேர்தலில் நல்ல முடிவு எடுத்து மக்கள் மீண்டும் அ.தி.மு.க.வை அரியணை ஏற வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.