வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி? - விளக்கமளிக்க ஆதார் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி? என்று விளக்கமளிக்க ஆதார் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-01 08:30 GMT
சென்னை,

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள புதுச்சேரியில் பாஜக கட்சி சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங்கப்பட்டு பிரசாரம் செய்யப்படுகிறது. 

இந்த வாட்ஸ்-அப் குழுக்களில் இருந்து வாக்களர்களின் செல்போன் எண்களுக்கு சில குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதாகவும், அந்த குறுந்தகவலில் இந்த வாட்ஸ்-அப் குழுவில் இணைந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டு அப்படி அந்த வாட்ஸ்-அப் குழுவில் இணையும்போது அந்த குழு மூலமாக பாஜக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறுச்செய்திகள் அனுப்பப்படும் செல்போன் எண்கள் அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட எண்கள் என்பதால் இந்த தகவல்கள் ஆதார் ஆணையத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், இது விதிமீறல் என்றும், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என்று ஆதார் ஆணையமே தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார். மேலும், இந்த விவரங்கள் அனைத்தும் பாஜக கட்சியினர் வீடு வீடாக சென்று செல்போன் எண்களை சேகரித்ததாக தெரிவித்தார்.

ஆனால், இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் ஆணையத்தின் அனுமதி பெறாமல் கடந்த மார்ச் 29-ம் தேதி வரை எஸ்.எம்.எஸ். மூலம் பாஜக பிரசாரம் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வீடு வீடாக சென்று பாஜகவினர் செல்போன் எண்கள் சேகரித்ததாக கூறுவது நம்பக்கூடிய வகையில் இல்லை என்றும் வாதிட்டார். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால் ஆதார் ஆணையத்திடமிருந்தே இந்த செல்போன் எண்கள் கசிந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மார்ச் 29-ம் தேதி வரை எஸ்.எம்.எஸ். மூலமாக பிரசாரம் மேற்கொண்ட பாஜகவினரின் இந்த நடவடிக்கை என்பது தீவிரமான தனிமனித உரிமை மீறல் என்றனர். மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட இந்த செல்போன் எண்களுக்கு மட்டுமே எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால் இந்த வாக்காளர்களுடைய விவரங்கள் எப்படி கசிந்தன? என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த விசாரணை குறித்து அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆதார் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதேபோல, வீடுவீடாக சென்று மொபைல் எண்களை சேகரித்ததாக  பாஜக முன்வைத்த வாதத்தையும் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையமும், ஆதார் ஆணையமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்