வசதியானவர்கள் பதிவு செய்யும் வாக்குகள் ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்கவேண்டும் - ம.நீ.ம. வேட்பாளர் ஸ்ரீ பிரியா
இந்த தேர்தலில் வசதியானவர்கள் பதிவு செய்யும் வாக்குகள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இருக்கவேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடிகை ஸ்ரீ பிரியா போட்டியிடுகிறார். அவர் மைலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின்போது ஸ்ரீபிரியா தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், வசதியாக இருப்பவர்கள், நடுத்தர மக்கள் இவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால் நீங்கள் பதிவு செய்யும் உங்களுடைய வாக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டும். ஏனென்றால், ஏழைகள் மட்டும் ஓட்டுப்போட்டால் போதாது. ஆகையால், ஏழைகளின் நலன் கருதி வசதியாக இருப்பவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் வாக்களிக்க வேண்டும். மைலாப்பூர் மக்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகின்றனர். அவர்கள் விரும்பும் புதியவர்கள் நாங்களாக (மக்கள் நீதி மய்யம்) இருப்போம். அதிகாரம் இருந்தால்தான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். வெற்றிபெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் பட்சத்தில் அடிப்படை தேவைகளில் நான் கவனம் செலுத்துவேன்’ என்றார்.