முதல்-அமைச்சர் பற்றி இழிவான பேச்சு: மன்னிப்பு கேட்டார், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா
முதல்-அமைச்சர் பற்றி இழிவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மன்னிப்பு கேட்டார்.
ஊட்டி,
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஊட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், தமிழக முதல்-அமைச்சரின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன்.
அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் நேற்று முன்தினம் கூடலூரில் நடந்த பரப்புரையின்போது, முதல்-அமைச்சர் குறித்தோ, அவரது தாயார் குறித்தோ புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை. இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றி நான் பேசினேன் என்று நானும், ஒரு தாயின் 8-வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.
மன்னிப்பு
அதன் பிறகும் முதல்-அமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கண் கலங்கினார் என்று நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடம் பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொண்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்தில் இருந்து வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலேபோய் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரானால், மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.
முதல்-அமைச்சருக்கும், அவரது கட்சிகாரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு 2 தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள 2 அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடு மற்றும் ஒப்பீடு தான்.
தீர்ப்பு
என் மீது தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சைனி தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில், இந்த வழக்கு எப்படி புனையப்பட்டது என்பதை 4 ஆங்கில வார்த்தைகளால் முடித்தார். கோப்புகளை தவறாக படித்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோப்புகளை படித்ததாலும், சில கோப்புகளை படிக்காமல் விட்டதாலும், சில கோப்புகளை இட பொருத்தமற்று படித்ததாலும் ஏற்பட்டதே இந்த வழக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை முழுமையாக நீங்கள் கேட்டால், இதே தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.