10 ஆண்டாக செய்யாததை இனிமேல் செய்யமாட்டார்கள்: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும்

10 ஆண்டாக செய்யாததை இனிமேல் செய்யமாட்டார்கள்: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும் ரா.நல்லக்கண்ணு பேச்சு.

Update: 2021-03-29 19:47 GMT
சென்னை, 

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். சைதாப்பேட்டை குயவர் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லக்கண்ணு கலந்துகொண்டு, மா.சுப்பிரமணியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது, ரா.நல்லக்கண்ணு பேசியதாவது:-

மா.சுப்பிரமணியன் சிறந்த மக்கள் தொண்டர். தன்னலம் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலனுக்காக உழைக்கக்கூடியவர். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தைப் பாழ்படுத்தியிருக்கிறார் முதல்-அமைச்சர். அந்த 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தேர்தல் அறிக்கை விட்டிருக்கிறார் என்னென்ன செய்வோம் என்று. 10 ஆண்டுகளாக செய்யமுடியாதவற்றை இனிமேல் செய்வார் என்றால் நம்ப முடியாது. இனிமேல் செய்வோம் என்றால் எப்படி நம்புவது. ஆகையால்தான் அ.தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. எங்களுக்கென்று கொள்கை இருக்கு. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றையும் நாங்கள் செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.மகேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.குணசேகரன், சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க. சுப்பிரமணி மற்றும் அன்புதாசன், மதி, தி.மு.க. வட்டச்செயலாளர் எஸ்.பி.கோதண்டம் உள்பட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்