ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலை சுமூகமாக முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் அந்த மனுவில், கடந்த 2016 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கயதை திருப்பி அளித்துவிட்டு எம்.ஜி.ஆர்.ஐ நினைவுபடுத்தக்கூடிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பத்திருந்ததாகவும், கடந்த 3 மாதங்களாக அந்த விண்ணப்பத்தின் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சின்னப்பட்டியலில் ஆட்டோ சின்னம் இருந்தும் ஆவடி தொகுதியில் தனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கவில்லை.
அதனால், ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும், தேர்தலில் ஆட்டோ சின்னத்தை தனக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கக்கூடிய பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால் தற்போதைய நிலையில் தேர்தல் நடைமுறையில் தலையிட முடியாது. தேர்தலை தள்ளிவைக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.