அதிமுக, திமுக என்ற பழக்கத்தை விடுங்கள்;நாங்கள் இருக்கிறோம் வாய்ப்பு கொடுங்கள் - சீமான் பேச்சு
அதிமுக, திமுக என்ற பழக்கத்தை விடுங்கள்; நாங்கள் இருக்கிறோம் வாய்ப்பு கொடுங்கள் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பேசிய சீமான், மற்றவர்கள் கோடிகளை கொட்டி வாக்கு கேட்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி மக்களை நம்பி நிற்கிறது என்றார். மாற்றம் என்பது அதிமுக-வை அகற்றி திமுக-வை அமரவைப்பது அல்ல என்றும் மாற்று அரசியலை கொண்டு வருவது எனவும் அவர் கூறினார்.
சீமான் பேசியதாவது, 'மீண்டும் இந்த 2 கட்சிகளை மட்டுமே கருத்தில் கொண்டிருக்காதீர்கள். வேறு வழியே இல்லை என்று கூறாதீர்கள். உங்கள் வயிற்று பிள்ளைகள் நாங்களே மாபெரும் வழியாக ஆகச்சிறந்த வழியாக மாறி வந்துகொண்டிருக்கிறோம். அதை கவனியுங்கள். மீண்டும் மீண்டும் பழகிவிட்டது என்று கூறாதீர்கள். பரப்பரை பரப்பரையாக அதிமுக, திமுக என்று கூறாதீர்கள். அது ஒன்றும் ராஜராஜசோழன் பரம்பரை, பாண்டியன் பரம்பரை எல்லாம் ஒன்றும் கிடையாது’ என்றார்.