தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்படவேண்டுமே தவிர டெல்லியில் இருந்து அல்ல - ராகுல்காந்தி பேச்சு

தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்படவேண்டுமே தவிர டெல்லியில் இருந்து அல்ல என்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Update: 2021-03-28 10:55 GMT
சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். 

அதனை தொடர்ந்து அடையாறில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். 

பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது,

இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து போராட நான் இங்கு வந்துள்ளேன். சில காலங்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்த பொது ஒரு இளமையான தலைவர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தார். அந்த தலைவர் பாஜக தலைவர் அமித்ஷாவினை சந்திக்கும் புகைப்படத்தை நான் பார்த்தேன். 

அந்த புகைப்படத்தில் அமித்ஷா ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அந்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் அமித்ஷாவின் காலை தொட்டு கும்மிட்டு நின்றுகொண்டிருந்தார். இது மிகவும் அவமரியாதை நிறைந்த உறவாக இது உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அதிக அதிகாரம் மிக்கவரின் காலை தொட்டு கும்மிடுவது அவமரியாதையான நிலையில் உள்ளது. இது தான் பாஜகவின் உறவுமுறையாக உள்ளது.

நீங்கள் பாஜகவிலோ அல்லது பாஜக கூட்டணியில் இருந்தாலோ அவர்களது காலை தொட்டு கும்மிடுவது தான் அவர்களது உறவாக உள்ளது. நீங்கள் நரேந்திரமோடி அல்லது அமித்ஷா முன் தலைகுணிந்து நிற்கவேண்டும். அவர்களுக்கு வேறு எந்த உறவும் புரியாது. ஆனால், காங்கிரசை பொறுத்தவரை ஏற்றதாழ்வு அற்ற உறவு முறையாக இருக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம்.

எங்கள் பார்வையில் தமிழ்மக்கள் அனைவரும் எங்கள் சகோதர சகோதரிகள். தமிழக மக்களுடன் சரிசமமான மரியாதை, அன்பான உறவு முறையை மட்டுமே வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

அனைவரும் தங்களுக்கு தலைவணங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக, நரேந்திரமோடி, அமித்ஷாவின் சித்தாந்தமாக உள்ளது. ஆனால், சகோதரத்துவம், சம உரிமை, சம மரியாதை என்பது காங்கிரசின் சித்தாந்தம்.

மிகவும் சிறந்த நாகரீகமும், சிறந்த மொழியும், சிறந்த பண்பாடும் கொண்ட தமிழகத்தின் முதலமைச்சர், பாஜக, ஆர்.எஸ்.எஸ், நரேந்திரமோடியின் காலை தொடுவதும், தலைகுனிந்து நிற்பதும் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதை பார்க்கும்போது எனக்கு கோபம் வருகிறது.

இவ்வளவு தொன்மையான மக்களின் தலைவர் பாஜக மற்றும் நரேந்திரமோடியின் போன்றவர்கள் முன் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கிறார். ஆகையால், தான் நான் இங்கு வந்துள்ளேன். தமிழக மக்களுடன் எனக்கு சமமான உறவு தேவைப்படுகிறது. அது மரியாதை நிறைந்ததாக இருக்கும். தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டுமே தவிர டெல்லியில் இருந்து இயங்கக்கூடாது என நான் விரும்புகிறேன்.

என்றார்.

மேலும் செய்திகள்