தமிழகம் முழுவதும் பரவி உள்ள நோய் கழகங்கள்தான்: கமல்ஹாசன் பிரசாரம்
தமிழகம் முழுவதும் பரவி உள்ள நோய் கழகங்கள்தான் என கமல்ஹாசன் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவர் பேசும்பொழுது, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களில் சிறை சென்றவர்கள், குற்றவாளிகள் கிடையாது. தமிழகம் முழுவதும் பரவி உள்ள நோய் கழகங்கள்தான் என்று கூறினார்.