சேலத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு முக்கிய ஆலோசனை நடத்தினர்

சேலத்தில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.;

Update:2021-03-25 04:57 IST
சேலம், 

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த அவர், அன்றைய தினம் இரவு சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார்.

நேற்று காலை கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதேசமயம், சேலம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

இந்தநிலையில், கரூருக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடங்கள் வரை முக்கிய ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் சுற்றுப்பயணம் குறித்தும், அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட பிரசார வியூகம், தேர்தல் அறிக்கையை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்