கொரோனா பரிசோதனைக்கு முதலில் மறுப்பு தெரிவித்து பிறகு ஒப்புக்கொண்ட பிரேமலதா
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்க்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது
இருப்பினும் பிரேமலதா தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று விருத்தாசலம் நகரப் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அங்கு வந்த விருத்தாசலம் சுகாதாரத்துறை ஆய்வாளர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒத்துழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த பிரேமலதா, பின்னர் பரிசோதனை செய்துகொள்ள முன்வந்தார். இதையடுத்து அவர் தங்கியிருக்கும் தனியார் பள்ளி வளாகத்திற்குச் சென்ற சுகாதாரத் துறையினர் பிரேமலதாவிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர்.