"இது தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை" - ஒற்றை செங்கலை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

இது தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒற்றை செங்கலை காட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-24 08:26 GMT
விருதுநகர்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தொகுதி திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் ரகுராமனுக்கு ஆதரவாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர் மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்துவிட்டது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்று கூறினார்.

பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிப் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

'உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். 'இதுதான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. அங்கு போனபோது இருந்தது. கையோடு எடுத்து வந்துவிட்டேன் எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். 

இதுதான் மதுரையில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை' என்று நாலாபுறமும் அந்த செங்கல்லைத் தூக்கிக் காட்டினார். 

மேலும் செய்திகள்