''சென்னையில் நாளை முதல் 31-ம் தேதி வரை தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறும்'' - மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ்
சென்னையில் நாளை முதல் 31-ம் தேதி வரை தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,300 பேர் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் 1.20 லட்சம் பேருக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. 12,000 பேர் தபால் வாக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறம். தபால் ஓட்டு போடும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா நோயாளிகள், மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்கு பெறப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களின் தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தபால் வாக்குகளை அடையாளம் காண 70 வாகனங்கள் சேவையில் உள்ளது. ஒரு வாகனத்தில் 2 வாக்குப்பதிவு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், ஒளிப்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏதுவாக அவர்களுக்கும் படிவம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.