வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக 14,215 தேர்தல் சிறப்பு பஸ்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை விடப்படுகிறது

வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக 14,215 தேர்தல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை இந்த பஸ்கள் விடப்படுகின்றன.

Update: 2021-03-24 01:21 GMT
சென்னை, 

சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க தபால் ஓட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வெளியூரில் வசிப்போர்

இந்தநிலையில் வெளியூரில் வசிப்போர் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க சிறப்பு பஸ்களை இயக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 215 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் 5 நாட்கள் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முடிவில், ஏப்ரல் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையில் இருந்து 2 ஆயிரத்து 225 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதவிர 3 ஆயிரத்து 90 சிறப்பு பஸ்களை இயக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 5 நாட்களில் மொத்தம் 14 ஆயிரத்து 215 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ்கள் இயக்கப்படும் இடங்கள்

இந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். விடுமுறை நாளான ஞாயிற்றக்கிழமை (ஏப்ரல் 4-ந் தேதி) மற்றும் திங்கட்கிழமை (ஏப்ரல் 5-ந் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்படுவது போன்று வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும்.

அதாவது ஆந்திர மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே. நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்தும், கும்பகோணம் மற்றும் விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் சானடோரியம் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

திருவண்ணாமலை-வேலூர்

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

நெல்லை-கன்னியாகுமரி

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, செங்கோட்டை, திருச்செந்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

கோவை, திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரத்து 644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேர்தல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 2 ஆயிரத்து 225 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர 2 ஆயிரத்து 115 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறை

சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கும், சேலம், திருண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூருக்கும் என மொத்தம் ஆயிரத்து 738 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணம் செய்யும் பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவு வசதி

இந்த பஸ்களில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் www.tnstc.in மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அலுவலக செயலி மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்