தமிழகத்தில் தேர்தலின்போது கொரோனா பரவலை தடுக்க விரிவான மூன்றடுக்கு திட்டம் - அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் தேர்தலின்போது கொரோனா பரவலைத் தடுக்க விரிவான மூன்றடுக்கு திட்டத்தை உருவாக்குவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-23 02:51 GMT
சென்னை,

கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. பீகாரில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்றிருந்த நேரத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. ஆனாலும் தேர்தலினால் தொற்று பரவாமல் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. இங்கும் பீகாரில் கடைபிடிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கையின் போதும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான ஒவ்வொரு அறை, அரங்கங்கள், வளாகங்கள் அனைத்தும் தொற்று பரவல் தடுப்புக்கான வகையில் சீர்படுத்தப்பட வேண்டும்.

அங்கு உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர், சோப், தண்ணீர் வசதி இருந்தாக வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

எலக்ட்ரானிக் வாக்கு எந்திரம், விவிபேட் எந்திரம் ஆகியவற்றை கையாளும் அனைவரும் கையுறை அணிந்திருக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் வகுப்புகள் அனைத்தும் பெரிய அரங்கங்களில் நடத்தப்பட வேண்டும். அதிகாரிகளுக்கு இடையேயான பயிற்சிகள், ஆன்லைனில் நடத்தப்படலாம்.

வாக்குப்பதிவின் போது கொரோனா தொற்று அறிகுறிகள் தெரியவரும் தேர்தல் அலுவலரை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு அவருக்கு பதிலாக பணியாற்றக் கூடிய அலுவலரை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் தயார் செய்யப்பட வேண்டும். வாக்குச்சாவடிகள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சுத்திகரிக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடியின் வெளியே உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட வேண்டும். மருத்துவ அலுவலர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

வாக்காளர் யாருக்காவது உடல் சூடு, தொற்று அறிகுறி தென்பட்டால், அவருக்கு டோக்கன் அளித்துவிட்டு, கடைசி ஒரு மணிநேரத்திற்கு முன்பு கொரோனா தடுப்பு உபகரணங்களுடன் வந்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

டோக்கன் வழங்குவதற்கான உதவிப் பிரிவு அமர்த்தப்பட வேண்டும். வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளிக்கான (6 அடி இடைவெளியில்) வட்டம் போடப்பட வேண்டும். பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கைகளுடன் கூடிய தனி காத்திருப்பு பகுதி அமைக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வராத வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு அவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு படங்கள், வாசகங்களை ஆங்காங்கு வைக்க வேண்டும். வாக்குப்பதிவு அல்லது வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சி முகவர் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால், அவரை அப்புறப்படுத்திவிட்டு மாற்று முகவரை நியமிக்க வாக்குச்சாவடி முதன்மை அதிகாரி அனுமதிக்க வேண்டும்.

வாக்காளரை அடையாளம் காண்பதற்காக வாக்குச்சாவடி அலுவலர் கேட்கும்போது முகக்கவசத்தை கீழே இறக்கலாம். கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க வரும்போது மருத்துவத் துறை அலுவலர்கள் அங்கிருக்க வேண்டும்.

அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரசாரத்திற்கு செல்லும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பிரசாரத்திற்காக வீட்டுக்கு வீடு செல்லும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

சாலைகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்போது தொடர்ந்து 5 வண்டிகளுக்கு மேல் செல்லக் கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுக்கூட்டம் நடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் நுழைவு வாயில், வெளி வாயிலை குறிப்பிட வேண்டும். அங்கு மாநில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதோடு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதை பின்பற்றாதவர்களுக்கு எதிராக பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றோடு, மாநில அளவில் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி விரிவான திட்டங்கள் உருவாக்கப்படும். மேலும் 3 அடுக்கு திட்டத்தையும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகளை உன்னிப்பாக செயல்படுத்த மாநிலத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்