மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரே அணியில் இருக்கிறோம் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரே அணியில் இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2021-03-23 00:48 GMT
தர்மபுரி, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயக்கம்

2011-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா குடும்பங்களுக்கும், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி கொடுப்போம் என்று ஜெயலலிதா சொன்னார். அதன்படி கொடுத்தார். தேர்தல் அறிக்கையில் வெளியிடும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. இயக்கம். 2006-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று சொன்னார். அப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்.

சொன்னபடி அவர் 2 ஏக்கர் நிலம் கொடுத்தார்களா, இல்லையே. தி.மு.க. கட்சி கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது. தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினர்தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள். வேறு யாரையும் விடமாட்டார்கள்.

ஒரே அணியில்...

மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம், அ.தி.மு.க. அரசை பற்றியும், அ.தி.மு.க. பற்றியும், நம் கூட்டணி கட்சிகளை பற்றியும் அவதூறாக விமர்சனம் செய்து வருகிறார். அப்படி பொய் பிரசாரம் செய்து வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல பாடத்தை இந்த தேர்தலில் மக்கள் புகட்ட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் படைத்தவர்கள் ஒரே அணியில் இருந்து ஒரு மெகா கூட்டணி, வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம்.

இந்த கூட்டணிதான் மக்களுக்கு நன்மை செய்யும், மக்களை ஏற்றம் பெறச் செய்யும், மக்களின் அடிப்படைத் தேவைகளான மருத்துவ வசதி, கல்வி வசதி, தண்ணீர் வசதி, வேலைவாய்ப்பு, தடையில்லா மின்சாரம் என அனைத்தையும் நிறைவேற்றுகிற கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி.

கோரப்பசியில் இருக்கிறார்கள்

அ.தி.மு.க. உழைக்கின்ற கட்சி, மக்கள் செல்வாக்கு நிறைந்த கட்சி. எங்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வலிமையான, வெற்றி கூட்டணி. எங்களைப் பற்றியும், எங்கள் கூட்டணி பற்றியும் பேசுவதை விட்டு விட்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்காவது முயற்சி செய்யுங்கள் ஸ்டாலின் அவர்களே.

அ.தி.மு.க.வினர் அனைவரையும் மதிக்கும் உள்ளம் படைத்தவர்கள். அதனால் நாங்கள் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருகின்றோம். நான் கடினமான உழைப்பாளி, நான் கீழ்மட்டத்தில் இருந்து உழைத்துத்தான் மேலே வந்திருக்கிறேன், திடீரென்று முதல்-அமைச்சராக ஆகவில்லை.

தி.மு.க 10 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை, கோரப்பசியில் உள்ளனர். ஜெயித்தால் மக்களையே முழுங்கிவிடுவார்கள். மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2 முறை பயிர் கடன் தள்ளுபடி

இதேபோல தர்மபுரி தொகுதியிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், ‘தமிழக வரலாற்றில் 2 முறை பயிர்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். ஏழை, எளிய மக்களுக்காக பாடுபடும் அ.தி.மு.க. அரசு தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்