எங்கள் ஆட்சியில் ‘அமைச்சர்கள் கொள்ளையடித்தால் கைது செய்யப்படுவார்கள்’ கமல்ஹாசன் உறுதி
எங்கள் ஆட்சியில் அமைச்சர்கள் கொள்ளையடித்தால், அவர்களுக்கு கைவிலங்கு போடப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் நேற்று திருப்பூண்டி வந்தார். அங்குள்ள கடைத்தெருவில் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் சித்துவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து நாகை சென்ற அவர், அந்த தொகுதி வேட்பாளர் செய்யது அனசை ஆதரித்து வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மதுக்கடைகளை மூட முடியாது
நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு அமோகமாக இருக்கிறது. என்னதான் இவர்கள் சொல்கிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்து எங்களை தேடி வருகின்றனர். நாங்கள் எதை சொல்கிறோமோ அதையே மற்ற கட்சியினர் காப்பி அடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
மதுக்கடைகள் மூடப்படும் என நான் சொல்கிறேன். அதுபோல ஆட்சியில் இருந்தவர்களும், வரவேண்டும் என நினைப்பவர்களும் சொல்ல முடியுமா?. முடியாது. ஏனென்றால் அவர்கள்தான் மதுக்கடைகளை வைத்திருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை மூட முடியாது.
கொள்ளையடித்தால் அமைச்சர்களுக்கு கைவிலங்கு
டாஸ்மாக் மூலமாகவோ, மக்களிடம் கொடுங்கோல் வரி போடுவது மூலமாகவோ அரசுக்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்பது அல்ல. திருடாமல் மக்களுக்கு ஒரு நல்ல அமைச்சர் கிடைத்தாலே போதும். அது கிடைக்க ஒரு அரிய வாய்ப்பை மக்கள் நீதி மய்யம் உங்களுக்கு கொடுக்கும். ரொம்ப தான் பேசுறீங்களே... செஞ்சு காட்டுங்க பார்ப்போம் என்று சிலர் சொல்வது என்னுடைய காதுகளுக்கு கேட்கிறது. நீங்கள் ஓட்டு போட்டால் தான், நான் ஆட்சிக்கு வர முடியும். நான் சொன்னதை செய்ய முடியும்.
ரூ.300, ரூ.5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டை விற்காதீர்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நல்ல திட்டத்தை எங்கள் அரசு உங்களுக்கு கொடுக்க முடியும். எங்கள் ஆட்சியில் அமைச்சர்கள் கொள்ளையடித்தால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கைவிலங்கு போடப்படும்.
நேர்மையான கட்சிக்கு ஓட்டுபோடுங்கள்
கஜா புயலின்போது நான் சீர்குலைந்து கிடந்த இடங்களுக்கு எல்லாம் நடந்து வந்தேன். மக்கள் எங்களை வரவேற்றார்கள். அப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஹெலிகாப்டரில் வந்தார்கள். அவர்களை அடித்து விரட்டினார்கள். ஆனால் நாங்கள் இப்போது ஹெலிகாப்டரில் வந்தாலும் மக்கள் எங்களை வரவேற்கிறார்கள்.
உங்கள் எதிர்கால சந்ததிகளைப் பற்றி யோசித்து நேர்மையான கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள். நேர்மையான முறையில் ஆட்சி அமையும். அதற்கு எங்கள் கட்சி வேட்பாளர்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். அந்தக் குரல் வலிமை பெற நான் உதவி செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.