கொரோனா 2-வது அலை பரவுகிறது: தேர்தல் பிரசாரத்தில் சால்வை, பூங்கொத்து கொடுக்க வேண்டாம்
கொரோனா 2-வது அலை பரவுகிறது: தேர்தல் பிரசாரத்தில் சால்வை, பூங்கொத்து கொடுக்க வேண்டாம் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த மாதம் வரை ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா நோய், கடந்த சில வாரங்களாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக அதிவேகத்தில் பரவும் கொரோனோ, இரண்டாவது அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அபாயகரமான சூழலில் தொண்டர்கள் நாமும் விழிப்புணர்வோடும், போதிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையோடும் இருக்க வேண்டியது அவசியம்.
மக்களிடம் பிரசாரம் செய்யச் செல்லும்போதும், நான் உள்ளிட்ட கட்சி முன்னணியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்யவரும் போதும் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.