தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க.-பா.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.;

Update: 2021-03-22 02:50 GMT
தர்மபுரி, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க.-பா.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் இன்று காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு பென்னாகரத்தில் பா.ம.க.வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தர்மபுரி 4 ரோட்டில் பா.ம.க. வேட்பாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 4 மணிக்கு காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகில் பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு மொரப்பூரில் அரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வே.சம்பத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் மாலை 6 மணிக்கு ஒடசல்பட்டி கூட்டு ரோட்டில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் வருகிறார். இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்