'நீங்கள்தான் என்னுடைய பிரசார பீரங்கி' கட்சியினருக்கு ஆடியோ பதிவு அனுப்பிய கமல்ஹாசன்
கட்சி அலுவலக வாசல்களில் தன்னுடைய பேச்சை பொதுமக்கள் கேட்க தொலைக்காட்சி வைக்குமாறும், நீங்கள்தான் என்னுடைய பிரசார பீரங்கி என்றும் கட்சியினருக்கு அனுப்பியுள்ள ஆடியோ பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வேகமாக பரவுவதால், எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும். நம்முடைய வேலையும் நடக்கவேண்டும், அதேநேரத்தில் உங்கள் ஆரோக்கியமும் முக்கியம். கோவை தெற்கு தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறேன். நமக்கு என்று பிரசார பீரங்கியாக சொந்தமாக தொலைக்காட்சியோ, பத்திரிகையோ கிடையாது. நீங்கள்தான் (தொண்டர்கள்) என்னுடைய பிரசார பீரங்கி.
234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் பல்லக்காக நான்தான் வர வேண்டும். என்னுடைய ஒவ்வொரு வேட்பாளரும் ஏறிப் போகும் அந்த புகழ் பல்லக்கு நான்தான். நான் அதுவாக இருப்பது எனக்கு சந்தோஷம். கட்சி அலுவலக வாசல்களில் நான் எங்கு, எத்தனை மணிக்கு பேசுகிறேன் என்ற அறிவிப்பை வையுங்கள். என்னுடைய பேச்சு, ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதை பொதுமக்கள் பார்க்க அலுவலக வாசலில் எல்.இ.டி. அல்லது பெரிய தொலைக்காட்சி வைக்கவேண்டும். மக்கள் அதைப் பார்க்கவேண்டும்.
தமிழகம் முழுவதும் கேட்கவேண்டும்
நான் பேசுவது ஒரு ஊருக்கு மட்டுமானது அல்ல. தமிழகத்தின் குறைகளை எல்லா இடங்களிலும் பேசிவருகிறேன். அது அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். தேவையான அனுமதிகளை தேர்தல் ஆணையத்தில் பெற்று இவற்றைச் செய்யவேண்டும். செயல்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முயற்சி பலன் கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும். காந்தி, ஊடகங்கள் இல்லாத காலத்தில் பேசியது நாடெங்கும் எதிரொலித்தது.
அவரின் கொள்ளுப் பேரன் நான். என்னுடைய குரல் தமிழகம் எங்கும் கேட்கவேண்டும். இதுவும் ஒரு சுதந்திரப் போர்தான். தமிழகத்துக்கு ஊழல் அரசுகளிடம் இருந்து சுதந்திரம் வாங்கும் போர். அதில் உங்கள் பங்கு இருக்கவேண்டும். இது நல்ல முறையில் பலன் கொடுக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏதுவாக நிர்வாகிகள் செயலில் இறங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.