தொகுதி கண்ணோட்டம்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

தமிழகத்திலேயே மிகச் சிறிய தொகுதியாக விளங்கி வந்த சேப்பாக்கம் தொகுதியுடன் 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்த சில பகுதிகள் இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியாக உருவெடுத்தது.

Update: 2021-03-21 14:23 GMT
சென்னை மாநகர மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுதியின் எல்லைகளாக துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு ஆகிய தொகுதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியின் வார்டுகள் 79, 81 முதல் 93 வரை மற்றும் 111 ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தத் தொகுதி. மெரினா கடற்கரை, சென்னை பல்கலைக்கழகம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், எழிலகம் கட்டிடம், பார்த்தசாரதி கோவில், பெரிய மசூதி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி, ரிச் தெரு போன்ற முக்கிய பகுதிகள் இந்தத் தொகுதியின் அடையாளங்கள்.

சேப்பாக்கம் தொகுதியாக இருந்தபோது, 1977-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலிலும், தொடர்ந்து 1980, 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளர் ஏ.ரகுமான்கான் “ஹாட்ரிக்” வெற்றியை பதிவு செய்தார். 1989-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எம்.ஏ.லத்தீப் வெற்றி பெற்றார். இப்படி, தொடர்ந்து 14 ஆண்டுகள் தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய இந்தத் தொகுதியில் 1991-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார். ஆனால், அதன்பிறகு 1996, 2001, 2006 ஆகிய 3 தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் கருணாநிதி வெற்றி வாகை சூடி, 
மீண்டும் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்தார்.இதேபோல், திருவல்லிக்கேணி தொகுதியில் 1977-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எம்.அரங்கநாதனும், 1980-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.ஜி.காஜா செரிப்பும் வெற்றி பெற்றனர். 1984 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முறையே அப்துல் சமது, கே.நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முகமது ஆசிப்பும், 1996-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் கே.நாஞ்சில் மனோகரனும், 2001-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.எம்.உசேனும், 2006-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பதர் சயத்தும் வெற்றி பெற்றனர்.தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011-ம் ஆண்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி என்ற பெயரில் களம் கண்ட முதல் தேர்தலிலும், 2016-ம் ஆண்டு தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகன் வெற்றி வாகை சூடினார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,25,920

பதிவான வாக்குகள் 1,43,669

ஜெ.அன்பழகன் (தி.மு.க.) 67,982

ஏ.நூர்ஜகான் (அ.தி.மு.க.) 53,818

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்த ஜெ.அன்பழகன் கடந்த ஆண்டு (2020) கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூன் 10-ந்தேதி மரணம் அடைந்தார். அதேமாதம் 15-ந்தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். ஆனால், சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு குறைவான மாதங்களே இருந்ததால், 
தற்போது வரை இந்தத் தொகுதி காலியானதாகவே இருக்கிறது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சிறுபான்மையின மக்கள் அதிகம் உள்ளனர். இவர்கள்தான் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகின்றனர். இந்தத் தொகுதியில் புதுப்பேட்டை, பார்டர் தோட்டம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ உதிரி பாகக் கடைகள் அதிகம் உள்ளன. இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு, ஒரகடத்தில் தனியாக ஆட்டோ நகர் உருவாக்கித்தரப்படும் என்று 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. மற்றபடி, போக்குவரத்து நெரிசல், கழிவுநீர் அடைப்பு, குப்பைகள் முறையாக 
அகற்றப்படாதது, செப்பனிடப்படாத சாலைகள் என்று பொதுவான பிரச்சினைகள் ஏராளம் இருந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த (2016) சட்டமன்ற தேர்தலின்போது, இந்தத் தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 920 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் - இடம் பெயர்ந்து வந்தவர்கள் இணைந்தது, மரணம் அடைந்தவர்கள், போலி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது போன்ற நடவடிக்கைக்கு பிறகு, தற்போது 2 லட்சத்து 34 ஆயிரத்து 319 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதாவது, 8 ஆயிரத்து 399 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி அறிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.என்றாலும், இந்தத் தொகுதியில் கடைசியாக நடந்த 2 தேர்தல்களில் தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சிக்கே வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் -2,34,319

ஆண்கள் -1,15,080

பெண்கள் -1,19,204

மூன்றாம் பாலினம் -35

மேலும் செய்திகள்