விலைவாசி ஏறியது பற்றி மத்திய மாநில அரசுகள் கவலைப்படவில்லை: மு.க ஸ்டாலின்

விலைவாசி ஏறியது பற்றி மத்திய மாநில அரசுகள் கவலைப்படவில்லை என நெல்லையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2021-03-20 13:51 GMT

நெல்லை:

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லையில், 5 தொகுதிகளில் போட்டியிடும், திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று, தவழ்ந்து சென்று அந்த பதவியை வாங்கியதாக நான் கூறினேன். இதனால் அவருக்கு கோபம் வந்துவிட்டது. நான் என்ன பாம்பா, பல்லியா? ஊர்ந்து போவதற்கு? என்கிறார். விஷப் பல்லி, விஷப் பாம்பின் விஷத்தைவிட துரோகம் என்பதுதான் கடுமையான விஷம். அந்த துரோகத்தை செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. யாரால் பதவி கிடைத்ததோ அந்த சசிகலாவுக்கு துரோகம் செய்தவர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர். இப்போது அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார். இப்போது அதிமுக, பாஜகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை இவர்கள் செய்கிறார்கள்.

அடிமைத்தனமான ஆட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்து நடத்துபவர் எடப்பாடி. இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் எல்லா வழக்குகளும் வாபஸ் என அறிவித்தார். ஆனால் கூடங்குளம் போராட்ட வழக்குகளை, தேசத்துரோக வழக்குகளை வாபஸ் பெறாதது ஏன்? இன்னும் வாபஸ் வாங்கவில்லை. 2011ம் ஆண்டு முதல் இந்த பகுதியை ஒரு எமர்ஜென்சி பகுதியைப் போல உருவாக்கி வைத்திருக்கிறாரே தவிர, வேறு ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

நாளுக்கு நாள் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு செல்கிறது. விலைவாசி ஏறியது பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. மாறி மாறி வரியைப் போடுகிறார்களே தவிர, விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ரேசன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்.

நான் மக்களை குழப்பி, வெற்றி பெறுவதற்காக சதி செய்வதாக கூறுகிறார் எடப்பாடி. ஆனால், மக்களை நான் குழப்பவில்லை, சதி செய்யவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டு கால சீரழிவை சரிசெய்ய முடியும் என மக்கள் தெளிவாக கருதுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக நான் கூறியிருக்கிறேன். ஆனால் ஸ்டாலின் பொய் சொல்கிறார், எப்படி தீர்க்க முடியும்? நம்பாதீர்கள் என எடப்பாடி பழனிசாமி மக்களிடம் சொல்கிறார். உங்களால் (எடப்பாடி) தீர்க்க முடியாது. 10 வருடம் என்ன, 20 வருடம் ஆட்சியில் இருந்தாலும் நடக்காது” என்றார். 

மேலும் செய்திகள்