நெல்லை தொகுதி அமமுக, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
நெல்லை தொகுதி அமமுக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.;
நெல்லை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.
234 தொகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலினைபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நெல்லை தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக பால் கண்ணன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல், இதே தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அழகேசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த தொகுதியில் மொத்தம் 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுக வேட்பாளர் பால் கண்ணன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசனின் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்துள்ளார்.
வேட்புமனுவை முன்மொழிந்த 10 பேரில், 3 பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் இல்லை என்ற புகாரில் அமமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், வேட்புமனுவை 10 பேர் முன்மொழியவேண்டும் என விதி உள்ள நிலையில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரை 9 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளனர். இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்த தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல சுயேட்சை வேட்பாளர் மாரியப்ப பாண்டியன் என்பவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், தங்கள் வேட்புமனுக்களை சரியாகவே தாக்கல் செய்தோம் என கூறிய அமமுக, சமத்துவமக்கள் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்று கூறி திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்தால் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.