அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-20 07:02 GMT
கரூர்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி (சனிக்கிழமை), 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் தவிர்த்து, எஞ்சிய நாட்களில் வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பல்வேறு கட்சியினரும், சுயேட்சைகளும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. 

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை
அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை இன்று நடைபெற்றுவருகிறது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது உள்ள வழக்குகள் தொடர்பாக சரியான தகவல்களை குறிப்பிடவில்லை என வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்