தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏன் அகற்றப்பட வேண்டும்? கே.எஸ்.அழகிரி பட்டியலிட்டு விளக்கம்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏன் அகற்றப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டு கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்தார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா ஆள வேண்டுமா?
தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாளை (இன்று) முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறேன். பிரசாரத்துக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தில் இருந்து சித்தராமையா உள்ளிட்டோரை அழைத்து இருக்கிறோம்.
இந்த தேர்தலின் முக்கியமான கருப்பொருளே, தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டுமா, டெல்லி ஆள வேண்டுமா என்பதுதான். மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், தமிழத்தை தமிழகம் ஆளும். மு.க.ஸ்டாலின் ஆளுவார். கூட்டணி கட்சிகள் துணை நிற்கும். இல்லை என்றால், தமிழகத்தை பா.ஜனதாதான் ஆளும், அ.தி.மு.க.வால் ஆள முடியாது.
விசாரணைகளுக்கு பயம்
தமிழகத்தில், அ.தி.மு.க.வை ஏன் அகற்ற வேண்டும் என்றால், முதல்கட்டமாக அவர்களால் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. மத்திய அரசிடம் இருந்து அவர்களால் எந்த உதவியையும், அனுமதியையும் பெற முடியவில்லை.
இரண்டாவதாக மொழி பிரச்சினை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்கிறது. அதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகிறது. சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு ரூ.300 கோடிக்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் செம்மொழியான தமிழுக்கு ஒதுக்கி இருக்கும் தொகை மிக மிக குறைவு. இதை தட்டிக்கேட்கும் துணிவு அ.தி.மு.க.வுக்கு இல்லை. காரணம் அவர்கள் மீது பல்வேறு விசாரணைகள் இருக்கின்றன. அதற்குப்பயந்து அவர்கள் மத்திய அரசை எதிர்ப்பது இல்லை.
வங்கிகள் விற்பனை
அடுத்ததாக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றன்பின் ஒன்றாக தனியாருக்கு ஒதுக்கி வருகிறது. வங்கிகளை தனியாருக்கு விற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் இல்லை என்றால், ஜனநாயக சோசலிசத்தை பின்பற்றும் நாடாக இருக்க முடியாது.
இவற்றை எல்லாம் எதிர்க்க அ.தி.மு.க. தயாராக இல்லாததால் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதை வலியுறுத்தி எங்கள் பிரசாரத்தை மேற்கொள்வோம்.
பிரசாரத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி அனந்தனுக்கு வாழ்த்து
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 89-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டதை ஒட்டி, அவருக்கு கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிரசாரக்குழு சார்பில் மாநில பொதுச்செயலாளர் க.ராமலிங்க ஜோதி தொகுத்து வழங்கிய ‘பேச்சாளர் கையேடு' புத்தகத்தையும் அழகிரி வெளியிட்டார்.