எனது முழுகவனமும் விருத்தாசலம் மீது தான் இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செல்லப்போவதில்லை பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செல்லப்போவதில்லை என்றும், எனது முழுகவனமும் விருத்தாசலம் மீது தான் இருக்கும் என்றும் வேட்பு மனு தாக்கல் செய்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
விருத்தாசலம்,
தே.மு.தி.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. அதன்படி, இந்த கூட்டணி சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்தநிலையில் நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் பிரவீன்குமாரிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
அப்போது தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் சுதீஷ் உடனிருந்தார்.
அமோக வெற்றி பெறுவேன்
இதை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2006-ல் விஜயகாந்த் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் 2021-ல் நான் போட்டியிடுகிறேன். விஜயகாந்திற்கும், தே.மு.தி.க.வுக்கும் முதல் வெற்றியை தந்தது விருத்தாசலம் தொகுதி.
2006-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் 5 ஆண்டுகாலம் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்திருக்கிறார். அதை தொடர்ந்து 2011-ம் ஆண்டும் எங்கள் வேட்பாளர் தான் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதி மக்களின், உயிரோடும் உணர்வோடும், ரத்தத்தோடும் கலந்தது தான் தே.மு.தி.க. ஆகும். 2021-ம் ஆண்டிலும் அந்த வரலாற்றை நாங்கள் நிரூபிப்போம். மீண்டும் மக்கள் ஆதரவோடு போட்டியிடும் நான், அமோக வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறேன்.
பிரசாரத்துக்கு செல்லவில்லை
இதுவரை 16 ஆண்டுகாலம் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்திருக்கிறேன். தற்போது நான் முதல் முறையாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதால் இந்த முறை அனைத்து தொகுதிகளுக்கும் என்னால் பிரசாரத்திற்கு செல்ல இயலாது. கால அவகாசம் இல்லை. 15 நாட்கள் தான் இருக்கிறது.
எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் பிரசாரம் மேற்கொள்வார்கள். இறுதிக்கட்ட பிரசாரத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய இருக்கிறார். நான் எனது முழு கவனத்தையும் இந்த முறை விருத்தாசலம் தொகுதியில் செலுத்த இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழுச்சி தெரியும்
தொடர்ந்து தே.மு.தி.க.வுக்கு தற்போது எழுச்சி குறைந்து விட்டதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், கொரோனா காலகட்டம் என்பதால் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனால் மே 2-ம் தேதி தேர்தல் முடிவு அன்று எங்களுடைய எழுச்சி தெரியும் என்றார்.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை விட பலமான நீங்கள் ஏன் அவர்களுடன் கூட்டணி வைத்தீர்கள் என நிருபர்கள் கேள்வி கேட்ட போது அதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார்.