பிரேமலதா விஜயகாந்த், எல்.முருகன், அண்ணாமலை, மன்சூர் அலிகான், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல்

பிரேமலதா விஜயகாந்த், எல்.முருகன், அண்ணாமலை, மன்சூர் அலிகான், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-18 08:19 GMT
சென்னை,

கடலூர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதற்காக வியாழக்கிழமை காலையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமாரிடம் மனுத்தாக்கல் செய்தார். இளைஞரணி செயலாளர் சுதீஷ், அமமுக அமைப்பு செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்ற வெற்றி மீண்டும் கிடைக்கும். இத்தொகுதி மக்கள் எங்கள் உயிரோடு கலந்து விட்டனர் என்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் 

தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தார்.

இதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் எல்.முருகன் தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் பவன்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து 5 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய் நோட்டுக்கள சேகரித்து ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகையை அவர் செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாராபுரம் தொகுதியில் எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராபுரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாகத்தான் எங்களது செயல்பாடுகள் இருக்கும் என்றார்.

முன்னதாக ஊர்வலத்தின்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பிரதமர் மோடி ஆகியோரைப் போன்று வேடமணிந்து வந்த கலைஞர்களை தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினர். காலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் எல். முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

அதேபோல தமிழக பாஜக துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை இன்று அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தவசெல்வனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

ஆனால் கட்சியை பதிவு செய்ய கால அவகாசம் இல்லாததால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். 


மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மதுரை வடக்கு மாவட்ட செயலர், வேட்பாளர் பி. மூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தத்திடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக சி.சிரைசெல்வன் மனு தாக்கல் செய்தார். திமுக கிழக்கு ஒன்றிய செயலர் ரகுபதி, பகுதி செயலர் சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கவிஞர் சினேகன் வேட்பாளராக அரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அத்தொகுதியில் சார் ஆட்சியர் அலுவலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இதன்பின் செய்தியர்களிடம் பேசிய அவர், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்