விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்திய ‘எடப்பாடி பழனிசாமியின் விவசாயி வேடம் ஏப்ரல் 6-ந்தேதி கலையப்போகிறது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்திய எடப்பாடி பழனிசாமியின் விவசாயி வேடம் ஏப்ரல் 6-ந்தேதி கலையப்போகிறது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் சண்முகம் சாலையில் தி.மு.க. - கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கொச்சைப்படுத்துகிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். விவசாயி என்பது உண்மையாக இருந்தால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பீர்களா? 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் - மாநிலங்களவையில் நிறைவேற்றுகிறபோது, அதை ஆதரித்தவர்கள் அ.தி.மு.க.வினர்.
இன்று நாடே கொந்தளித்து கொண்டிருக்கிறது. 100 நாட்களை தாண்டி டெல்லியில் இன்றைக்கும் விவசாய பெருங்குடி மக்கள் லட்சக்கணக்கில் குடும்பத்தோடு உட்கார்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் தன்னை விவசாயி என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைவிட கொடுமை போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை புரோக்கர் என்றே கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இடைத்தரகர்கள் என கொச்சைப்படுத்துகிறார்.
வேடம் கலையப்போகிறது
எடப்பாடி பழனிசாமி விவசாயி வேடம் உறுதியாக நிச்சயமாக, வரும் ஏப்ரல் 6-ந்தேதி கலையப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சட்டரீதியாக ‘நீட்’டை தமிழ்நாட்டில் இருந்து நீக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் நாம் ஈடுபடுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல்-அமைச்சரிலிருந்து - அமைச்சர்கள் வரை செய்திருக்கும் ஊழல்களை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற ஒரு உறுதிமொழியை சொல்லியிருக்கிறோம்.
விலைவாசி விஷம்போல ஏறியிருக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டு இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சராக உட்கார்ந்து ஆளத்தெரியாது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். தமிழ்நாட்டின் இன்றைய நிலை சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் கடன். 2011-ல் தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கியபோது 1 லட்சம் கோடி ரூபாய் கடன். இந்த 10 வருடங்களில் 5 லட்சம் கோடி ஆகி இருக்கிறது. எனவே ஆளத்தெரியாது என்பதற்கு இதைவிட சாட்சி சொல்ல வேண்டுமா?
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தெரியாத ஆட்சி தான் இந்த ஆட்சி. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொல்லும் நிலை ஏற்பட்டிருக்குமா? அந்த குடும்பங்கள் இன்று அனாதையாக நிற்க நேர்ந்திருக்குமா? எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் சூழ்நிலை இதுதான்.
பொள்ளாச்சி சம்பவம்
இந்த ஆட்சியில் பெண்கள் எந்த அளவிற்கு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், பொல்லாத ஆட்சி என்பதற்கும் அடையாளமே பொள்ளாச்சிதான். 200-க்கும் மேற்பட்ட பெண்களை, கடத்தி, பலாத்காரம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து, பணம் பறித்திருக்கிறார்கள்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமை இன்றைக்கு பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
மகளிர் கல்லூரி
இந்த மாவட்டத்தில் - மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும், ஒரகடத்தில் ரெயில்வே மேம்பாலம், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
சிங்கபெருமாள்கோவில் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இணைக்கப்பட்டு நகராட்சியாக மாற்றப்படும். மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை, மீனம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு ஆகிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி கருணாநிதிக்கு பெருமை சேர்க்கப்போகிறோம்.
இடம் கொடுக்கலாமா?
கருணாநிதி நம்மைவிட்டு மறைந்தபோது அவருடைய கடைசி ஆசை, அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அவர் உயிர் பிரிகின்ற நேரத்தில்கூட கடைசியாக உபயோகித்த வார்த்தை அண்ணா என்பதுதான். அதை நிறைவேற்ற இந்த ஆட்சி சம்மதிக்கவில்லை. கோர்ட்டில் போராடி இடம் பெற்றோம். கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா சிந்தியுங்கள் செயல்படுங்கள். அதற்கு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மதுரையில் பிரசாரம்
முன்னதாக நேற்று காலை மதுரையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் வேடசந்தூரிலும் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், ‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி வில்லன். விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.