அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது - பாஜக தலைவர் எல்.முருகன்
அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளதாகவும், அ.தி.மு.க.வினர் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கூறினார்.
பல்லடம்,
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் பல்லடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு உண்மையிலேயே நல்லது செய்வது பா.ஜனதா கட்சிதான். ஏனென்றால் விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என, புதிய விவசாய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா போன்ற சில மாநில விவசாயிகள் தான் புரியாமல் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 45 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். எங்களது கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க.வினர் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உறுதியாக பா.ஜனதா தான் வெல்லும். கமல்ஹாசனை பார்க்கத்தான் மக்கள் வருவார்கள். வாக்களிக்க அல்ல. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் ஒத்துழைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
பா.ஜனதாவினருக்கு சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது என்பது பொய். அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது பா.ஜனதாதான். தாராபுரம் தொகுதியில் பிரசாரத்திற்கு வரவேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். வருமான வரித்துறை சோதனைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க.வின் பொய் பிரசாரங்களை முறியடித்து, எங்களது கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.