இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: தமிழர்கள் 7 பேர் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும், தமிழர்கள் 7 பேர் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-03-18 00:04 GMT
சென்னை, 

ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்தரிதாஸ், செய்தி தொடர்பாளர் நன்மாறன் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

69 சதவீத இடஒதுக்கீடு

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மாநில அரசின் அதிகாரம் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படும். மதசார்பின்மை கோட்பாட்டுக்கு ஊறு விளைவிக்க இடம்தர மாட்டோம்.

மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் அனைத்து படிப்புகளுக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற குரல் கொடுப்போம்.

கேரளாவை போன்று தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வலியுறுத்துவோம்.

குரல் கொடுப்போம்

மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி, ஆங்கில மொழிகளில் பெயர் சூட்டப்படுகின்றன. மாநில மொழிகளில் பெயர்சூட்ட வலியுறுத்தப்படும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற குரல் கொடுப்போம்.

விவசாயிகள் தேசிய மற்றும் வணிக வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.

பயிர் கொள்முதல் திட்டம்

வேளாண் விளைபொருட்களின் கொள்முதலுக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்து இருக்காமல் தெலுங்கானா, குஜராத், ஒடிசா, கர்நாடகம், சத்தீஷ்கார் போன்ற மாநில அரசுகள் உருவாக்கி உள்ளதை போன்று தமிழகத்திலும் மாநில அரசு பயிர் கொள்முதல் திட்டம் உருவாக்க வலியுறுத்தப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆக்குவதற்கு மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப்படிம எரிகாற்று திட்டங்களுக்கும், பெட்ரோலிய எண்ணெய் சுழற்சி ஆலைக்கும் தமிழக அரசு உரிமம் வழங்கக்கூடாது என தொடர்ந்து போராடுவோம்.

புதைவட கேபிள்

ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் இதை புதைவட கேபிள் மூலம் செயல்படுத்த வலியுறுத்துவோம்.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட தொடர்ந்து குரல் கொடுப்போம். பயிர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளையை தடுத்து விவசாயிகள் முழு பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை செம்மையாக செயல்படுத்த வற்புறுத்துவோம்.

7 பேர் விடுதலை

முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட குரல் கொடுப்போம். முழு மதுவிலக்கே எங்கள் இலக்கு என்பதை முன்வைத்து மதுக்கடைகளை மூடவும், மது இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றவும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தமிழர்கள் 7 பேர் விடுதலைக்கும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம். இலங்கை தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்றம் விசாரிக்க வற்புறுத்துவோம். தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

மேற்கண்டவை உள்பட மேலும் பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

234 தொகுதிகளிலும் வெற்றி

இதன்பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, ‘அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி கிடக்கிறது. அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழலை புள்ளிவிவரங்களோடு தி.மு.க., தமிழக கவர்னரிடம் வழங்கி உள்ளது. தமிழகத்தில் சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை தட்டிபறிக்க முயற்சித்து வரும் பா.ஜ.க.வோடு அ.தி.மு.க கைகோர்த்து உள்ளது. இந்த கூட்டணியை தோல்வி அடைய செய்து மதசார்பற்ற கூட்டணியான தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய பாடுபடுவோம். தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என்றார்.

மேலும் செய்திகள்