"வேட்பாளர்கள் தேர்வு செய்ய போதிய அவகாசமில்லை "ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜுனமூர்த்தி கட்சி தேர்தலில் போட்டி இல்லை
ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜுனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
நடிகர் ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமுர்த்தி, தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்தோடு, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் சின்னம் ரோபோ என அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.
ஆனால், போதிய கால அவகாசம் இல்லாததாலும், வேட்பாளர்களின் பிரசாரத்துக்குத் தேவையான ரோபோக்களை உருவாக்குவது மற்றும் கொண்டு செல்வது போன்றவற்றை செய்ய போதிய காலம் இல்லாததால் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று திடீர் என அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காலத்துக்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம். வேட்பாளர்கள் தேர்வு செய்தல், தேவையான மற்ற வளங்கள் சேகரிப்பு மற்றும் சீரிய நிர்வாகம், அனைத்துத் தொகுதிகளிலும் இயந்திர மனிதன் சின்னத்திற்கான தொழில்நுட்பத்தை வரிசைப்படுத்துதல், எடுத்துச் செல்வது, களப்பிரசாரம் செய்வது அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் கையாளுவது நமக்கு இடம் தரவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ர தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்திப் பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு செய்துள்ளது என்று அறிவித்துள்ளார்.