தொகுதி கண்ணோட்டம்: கும்மிடிப்பூண்டி

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதி என்ற பெருமைக்கு உரியது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி.

Update: 2021-03-16 21:11 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதி என்ற பெருமைக்கு உரியது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி. ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள இந்த தொகுதியானது, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை என இரண்டு தாலுகாக்களை உள்ளடக்கியது. அதே போல கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் என 2 ஒன்றியங்களும் இந்த தொகுதியில் அடங்கும்.

கும்மிடிப்பூண்டி தொகுதியை பொறுத்தவரை முக்கிய வழிபாட்டு தலமாக பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கிடும் வகையில் 5-வது பெரிய நீர் ஆதராமாக ரூ.390 கோடியில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை இத்தொகுதியில் தான் உள்ளது.

தொகுதியில் சில முக்கிய தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் உள்ளன. வன்னியர், தலித் மக்கள் கணிசமாக வசித்து வரும் இந்த சட்டமன்ற தொகுதியில், சிறுபான்மை மொழியாக தெலுங்கு பேசும் நாயுடு உள்பட பல்வேறு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர்.

தமிழக-ஆந்திர எல்லை அமைந்திருப்பதாலும், சிப்காட் தொழிற்பேட்டை பகுதி என்பதாலும் வடமாநிலத்தினர் இத்தொகுதியில் ஓரளவு வசித்து வருகின்றனர்.

இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 6,681 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் மொத்த வாக்காளர்களாக 2 லட்சத்து 60 ஆயிரத்து 871 பேர் இருந்த்னர், தற்போது 19,905 வாக்காளர்கள் அதிகரித்து, 2 லட்சத்து 80 ஆயிரத்து 776 வாக்காளர்கள் உள்ளனர்.

1971 முதல் இருந்து 2016 வரை ஒரு இடைத்தேர்தல் உள்பட கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடந்த 12 சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. 8 முறையும், தி.மு.க. 3 முறையும், தே.மு.தி.க. ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன.

இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனை தவிர்த்து நெசவு தொழிலும் இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. நெல், கீரை மற்றும் காய்கறி வகைகள், பூ, சீசனுக்கு உரிய மாம்பழம், தர்பூசணி போன்றவைகளும் அதிக அளவில் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இரும்பு உருக்கு தொழிற்சாலைகளும், தனியார் அனல் மின் நிலையங்களும் அதிக அளவில் செயல்படுகின்றன. இது தவிர கார்பன் மற்றும் டயர் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்திடும் தொழிற்சாலைகளும் உள்ளதால், காற்று மாசு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு அடைவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் நிலவரம் வருமாறு:-

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,60,871

பதிவான வாக்குகள் 2,14,354

கே.எஸ்.விஜயகுமார் (அ.தி.மு.க.) 89,332

சி.எச்.சேகர் (தி.மு.க.) 65,937

தமிழக அரசின் அம்மா குடிநீர் உற்பத்தி மையம் இந்த தொகுதிக்கு உட்பட்ட பெத்திக்கும் ஊராட்சியில் அமைந்து உள்ளது. தற்போது கொரோனா காலகட்டத்தின் எதிரொலியாக அந்த மையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் மையத்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக உள்ளூர் மக்களிடையே ஆதங்கம் உள்ளது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை பல வருடங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் போதிய டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், இந்த அரசு பொது மருத்துவமனை முழுமையாக செயல்பட முடியாத சூழலே ஏற்பட்டு உள்ளது.

மேலும், அவசரகால சிகிச்சைக்காக இங்கு வரும் நோயாளிகளை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும் அனுப்பும் நிலையே தற்போது வரை நீடிக்கிறது.

கும்மிடிப்பூண்டியில் முறையான பஸ் வசதிகள் இல்லை. கும்மிடிப்பூண்டி பஜார் பஸ் நிலையத்தில் உள்ளூர் நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. சென்னை கோயம்பேட்டிற்கு இங்கிருந்து நேரடியாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என்பது பயணிகளின் குறையாக உள்ளது. ஏற்கனவே கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை பிராட்வே வரை இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ்கள், தற்போது செங்குன்றம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர், ஸ்ரீகாளகஸ்தி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் கூட கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை வழியே எப்போதும் இயக்கப்பட்டு வருவதால் கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து சென்னைக்கு நேரடி போக்குவரத்து இன்றி பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தவிர கும்மிடிப்பூண்டியில் கலைக்கல்லூரி, ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் மேம்பால போக்குவரத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். பெரியபாளையம் அடுத்த மங்களம் கிராமத்திற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்திட வேண்டும். கும்மிடிப்பூண்டியில் ஏற்கனவே திட்டமிட்ட போக்குவரத்து பணிமனையை உடனடியாக அமைத்திட வேண்டும் போன்றவை நீண்ட நாட்களாக இருந்து வரும் கோரிக்கைகள் ஆகும்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பாக எம்.பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் டி.ஜே.கோவிந்தராசன் எதிர்த்து களம் காண்கிறார்.

மேலும் செய்திகள்