தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை ஒருங்கிணைக்க புதிய செயலி - விரைவில் தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது
விரைவான நடவடிக்கைக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட புதிய செயலியை தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடுகிறது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைப்பதற்காக முதல் முறையாக தேர்தல் பணிக்கான புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி உருவாக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொடங்கியது. தற்போது சோதனை அடிப்படையில் அமலில் உள்ளது.
தேர்தல் கமிஷனர், வருமானவரி, சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து தகவல்களை பரிமாறுவதற்காக, விரைவான நடவடிக்கைக்காக இந்த செயலி தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஒவ்வொருவரும் தினசரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன், எந்த தேர்தலிலும் இது போன்ற செயலி உருவாக்கப்படவில்லை. இந்த செயலியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இது இருக்கும்.
மேற்கண்ட தகவல்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.