அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-03-15 23:06 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார். அப்போது நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதன்பிறகு நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் மற்றும் எம்.பி.யாகவும் இருந்துள்ளேன்.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் எடுபடுமா? என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை. தமிழகத்தில் அதிகமான கடன் சுமை இருந்தாலும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கடன் சுமையில் தான் உள்ளன. மக்களுக்கான திட்டங்களை செய்வதில் தமிழக அரசு முதன்மை வகிக்கிறது. தமிழகம் முழுவதும்அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

குடியுரிமை திருத்த சட்டம்

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்தால் அவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்