‘அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை’ கமல்ஹாசன் பேட்டி
அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோவை,
கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
களமிறங்குவது முதல் முறை
ஜனநாயக கடமையை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிறது. இது நான் களம் இறங்கும் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான். எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம் இருக்காது. எங்களின் திட்டத்தையும், செழுமையையும் நம்பியே களமிறங்கி இருக்கிறோம்.
கோவை மனதுக்கு இனிய ஊர்களில் ஒன்று. இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். எனது இந்த ஏற்றத்திற்கு காரணமானவர்கள் இங்கு இருக்கின்றனர். அதனாலேயே இங்கு போட்டியிடுகிறேன். இங்கே மத நல்லிணக்கம் இல்லாமல் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதற்கு எதிரான குரலாக நாங்கள் இருப்போம்.
முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்
முன்மாதிரி தொகுதியாக கோவை தெற்கு தொகுதியை மாற்ற முடியும். வெளியூரை சேர்ந்தவர் என என்னை யாரும் சொல்ல மாட்டார்கள். நான் தமிழன், எனக்கு நண்பர்கள் உறவினர்கள் இங்கு இருக்கின்றனர். 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாகவே கருதுகிறார்கள். இனி கோவையை மையமாக வைத்து கொண்டு எனது பிரசாரம் இருக்கும்.
அரசியல் எங்களது கடமை
டாக்டர் பணி செய்தவர், தொடர்ந்து அந்த பணியை செய்வார். எங்களுக்கும் வேறு தொழில்கள் உள்ளன. அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல. அரசியல் எங்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கமல்ஹாசன் நேற்று அந்த தொகுதிக்கு உட்பட்ட கோவை தேர்நிலைத் திடல் பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.