ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் - திருவாரூர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று திருவாரூர் பிரசாரத்தில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-03-15 17:24 GMT
திருவாரூர்,

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூரில் திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன். பாஜக - அதிமுக கூட்டணியால் பாழ்பட்டுவிட்ட தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலிக்கிறது. நாங்கள் சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!. 

கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசால் தமிழகம் பின் தங்கி விட்டது. சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பொய் சொல்கிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்று அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும்.

ஆட்சிக்கு வரப்போவதில்லை எனத் தெரிந்து விட்டதாலேயே, தேர்தல் அறிக்கையில்  எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு ஏரோபிளேன் கொடுப்பேன், ஹெலிகாப்டர் கொடுப்பேன் எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்