ரூ.6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன. மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது,
* முதன் முதலாக 1989ஆம் ஆண்டு போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார்
* அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகிக்க ஜெயலலிதா வாய்ப்பளித்தார்
* எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற அரும்பாடுபட்டுள்ளேன்
* அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுமா என்பது தேர்தலுக்கு பின் தெரிய வரும்
* அடித்தட்டு மக்கள் அதிமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள்
* ரூ.6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்கிறது
* எடப்பாடி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவரப்படும்
* எடப்பாடி தொகுதியில் சாலை, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளேன்
என்றார்.