அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியீடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், அமமுக - தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன்.
இந்நிலையில் அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் 60 (அறுபது) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவன், அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
#BREAKING : தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு#AMMK | #DMDK | #Election2021 | #TNElection2021pic.twitter.com/5G7kpwSwSz
— Thanthi TV (@ThanthiTV) March 14, 2021