ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு அறிவிக்க உள்ளதாக தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-03-13 17:58 GMT
சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ளடங்கிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிச்சயம் பா.ஜ.க.வுக்கே ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்நோக்கப்பட்டது. காரணம், அத்தொகுதியில் பா.ஜ.க. பொறுப்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டது தான். இன்னும் சொல்லப்போனால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு தான் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனாலேயே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு மிகவும் கவனம் செலுத்தினார். தொகுதியில் தினந்தோறும் வீடு வீடாக சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். மேளதாளம் வாசித்தும், பெண்களுடன் சகஜமாக நடனமாடியும் தினந்தோறும் அப்பகுதிவாசிகளின் கவனத்தை ஈர்த்து வந்தார். தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலையில் ஹை-டெக் பாணியில் கண்டெய்னரில் தேர்தல் பணிமனை அமைத்தார். ‘நீங்கள் தான் வேட்பாளர்' என்று அறுதியிட்டு கூறும் அளவுக்கு குஷ்புவின் செயல்பாடுகள் அமைந்தது. மேலும் தனக்கு ‘சீட்' கொடுத்துவிட்டதாகவே நினைத்து நடிகை குஷ்பு ஓடி ஓடி உழைத்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் சவாலான வேட்பாளராக குஷ்பு நிச்சயம் இருப்பார் என்று ஆரூடமும் கூறப்பட்டது. இந்தநிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.வுக்கு, அ.தி.மு.க. அறிவித்தது.

இந்நிலையில், தமிழக பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:-

பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் பட்டியலுடன் குஷ்பு பெயரும் விரைவில் அறிவிக்கப்படும். அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார். தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 வேட்பாளர்கள் பெயர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நாளை மாலை இறுதி செய்யப்படும் என்றார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு இன்று கூடியது.

அசாமில் 19 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயரும் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று மற்றொரு பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

 பாஜக ஏற்கனவே அசாமிற்கான 73 வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது. அசாம் சட்டசபையின் மொத்தம் 126 இடங்களில் 92 இடங்களில் பாஜக கட்சி போட்டியிடுகிறது.

மேலும் செய்திகள்