ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் அண்ணன்-தம்பி
ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் அண்ணனும், அ.தி.மு.க. சார்பில் தம்பியும் மீண்டும் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற புகழை கொண்டது. இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணிக்கு சென்ற தங்கதமிழ்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க சார்பில் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து அவருடைய உடன்பிறந்த அண்ணன் மகாராஜன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
எதிரும், புதிருமாக உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதியதால் அப்போது ஆண்டிப்பட்டி தொகுதி பரபரப்புக்கு உள்ளானது. அந்த தேர்தலில் 12 ஆயிரத்து 363 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்று தம்பி லோகிராஜனை தோல்வியடைய செய்தார். இதையடுத்து 20 ஆண்டுகள் அ.தி.மு.க.வசம் இருந்த ஆண்டிப்பட்டி தொகுதியை தி.மு.க. தன்வசப்படுத்தியது.
மீண்டும் மோதல்
இந்த நிலையில் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த லோகிராஜன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வும், லோகிராஜனின் உடன்பிறந்த அண்ணனுமாகிய மகாராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் அண்ணன்-தம்பி நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டு உள்ளது.
20 ஆண்டுகளாக அ.தி.மு.க.விடம் இருந்த ஆண்டிப்பட்டி தொகுதியை தட்டிப்பறித்த தி.மு.க. அதை தக்க வைத்துக்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் இழந்த ஆண்டிப்பட்டி தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க. களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது. அண்ணன்-தம்பியாக இருந்தாலும் அரசியல் களத்தில் இருவரும் எதிரும், புதிருமாக மோத இருப்பது மீண்டும் ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.