தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வேல்முருகன் போட்டி.

Update: 2021-03-11 22:18 GMT
சென்னை, 

தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது எந்த தொகுதி என்பது குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதியில் என்னை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். எனவே, நான் பண்ருட்டி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறேன். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வரலாற்று வெற்றியை பெறும்’ என்று கூறினார்.

வேல்முருகன் கடந்த 2001, 2006 ஆகிய சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் பண்ருட்டி தொகுதியில் ‘மாம்பழம்’ சின்னத்தில் போட்டியிட்டு 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது அவர், தி.மு.க.வின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்